×

94% நன்கொடை விவரம் இல்லை.. தேர்தல் பத்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தகவல்..!!

டெல்லி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் பாத்திரங்கள் குறித்த விவரங்களில் 94% பத்திரங்களுக்கான நன்கொடையாளர்கள் யார் என்ற விவரம் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, கோவா ஃபார்வர்ட் கட்சி ஆகியவை மட்டுமே முழுமையான விவரங்களை அளித்துள்ள நிலையில் மொத்த பத்திரங்களில் 87% நிதியை பெற்றுள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய 5 கட்சிகள் விவரங்களை வெளியிடாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் குறித்து கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விவரங்களில் எந்த கட்சிக்கு யார் நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறாததால் முழுமையான விவரங்களை அளிக்க எஸ்.பி.ஐ. மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்தமாக 4% அளவுக்கான நிதியை பெற்ற திமுக மற்றும் கோவா ஃபார்வர்ட் கட்சி ஆகியவை அளித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

எஞ்சிய அரசியல் கட்சிகள் பெற்ற 94% நன்கொடைகள் குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் புதிய தகவலின் படி பாஜக 8,251 கோடி ரூபாயும், காங்கிரஸ் 1,952 கோடி ரூபாயும், திரிணாமுல் காங்கிரஸ் 1,708 கோடி ரூபாயும், பி.ஆர்.எஸ். 1,408 கோடி ரூபாயும், பிஜூ ஜனதா தளம் 1,202 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. ஒட்டு மொத்த தேர்தல் பத்திர நன்கொடையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல், பிஆர்எஸ் மற்றும் பிஜூ ஜனதா தள கட்சிகள் மட்டுமே 87% அளவுக்கான நன்கொடையை பெற்றுள்ளன. 5 கட்சிகள் பெற்ற 87% நன்கொடையில் 50% அதிகமான நன்கொடையை பாஜக மட்டுமே பெற்றுள்ளது.

2019 மே மாதத்திற்கு பிறகான விவரங்களை மட்டுமே அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை 1% குறைவான நன்கொடையை பெற்றுள்ளன. ரகசியம் காக்கும் வகையில் தேர்தல் பத்திரம் வடிவமைக்கப்பட்டதால் நன்கொடையாளர்கள் விவரங்களை தரவில்லை என பாஜக தெரிவித்துள்ளது. பத்திரத்தை அலுவலகத்தில் பெட்டியில் அமைத்து அதில் போட்டு செல்லும்படி ஏற்பாடு செய்திருந்ததால் நன்கொடையாளர் விவரங்கள் தங்களிடம் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தங்களிடம் உள்ள தகவல்களை கொடுத்து விட்டதாகவும், அலுவலகத்தில் சிலர் கொடுத்து சென்றதால் அவர்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்றும் ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. காங்கிரஸ் தரப்பு விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

 

The post 94% நன்கொடை விவரம் இல்லை.. தேர்தல் பத்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,DMK ,Goa Forward Party ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...